Saturday, December 17, 2011

17-12-2011

நீ எங்கே இருக்கிறாய்
என்று தேடியதை தவிர்த்து
இப்பொழுதெல்லாம்
என்னை சுற்றி தான்
எங்கோ இருக்கிறாய் என்று
தேடும் கண்களை கொண்டுவிட்டேன்...

Wednesday, December 14, 2011

14-dec-2011

இழந்தவை நிஜமல்ல
பெற்றவையே நிரந்தரம்...
இழந்தவற்றை மறந்து,
கிடைத்தவற்றை
மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்வோமே...

Monday, October 10, 2011

07-10-2011 11:22pm



என்னை சுற்றி
காதல் உணர்வுகளும்,
அதனால் உண்டாகும் 
உற்சாகமும் சூழ்ந்துள்ளது;
என்னுள்ளும் அது 
ஏக்கம் என்னும் 
உணர்வை விதைத்துள்ளது;
சிறுதுளி நீராக 
உன் பார்வை விழும் என 
காத்துக்கொண்டிருக்கிறேன்;
நீ மழையாக வந்தாலும் 
மகிழ்ச்சியே!!!!  

Sunday, October 02, 2011

02/10/2011


நீ வருவாய் என்று காத்திருக்கிறேன்;
உன் வருகைக்கான உத்திரவாதம் 
ஏதும் இல்லை..
ஆனாலும் காத்திருக்கிறேன்;
என்றாவது வருவாய் என்ற 
சிறு நம்பிக்கையுடன்...

02-10-2011 11:46



நான்கு சுவரும்,
ஒரு தொலைக்காட்சியும் ,
சில உணவு பொருட்களும் ,
வெறுமையும் ,
என்றும் பெற்றோரின் வருகைக்காக 
ஏங்கும் சிறு ஜீவனும் 
பல வீடுகளின் இன்றைய நிலையை 
பறைசாற்றுகின்றன...

02-10-2011

மூடு  பனியில்  நடந்துகொண்டே 
என்  வழிக்கான  பாதை  தேடுகிறேன் ;
வண்ண  மலர்களால்  நிரப்பாவிடினும் , உன் 
காத்திருப்பிற்கு  ஒரு  அறிவிப்பு  பலகையாவது 
வைத்துவிடு …              
தேடிக்கொண்டே  இருக்கிறேன்  இன்னும் 
உன்  காத்திருப்பு  பாதை 
எது  என்று  தெரியாமல் …

Monday, August 15, 2011

15-08-2011

கொடுமையான தண்டனை என்பது
மௌனம் மட்டும் அல்ல;
உடன் வாழும்
சக மனுஷியை புரிந்துகொள்ள
எடுக்கப்படாத
சிறு முயற்சியும் கூடத்தான்...


15-8-2011

பூக்களின் வண்ணக் கலவையாக
முகம் மலர,
ஆடிப்பாடி ஆனந்த சுதந்திரத்தை
அடைந்து விட்ட களிப்பில்
எல்லா மனங்களும் ஒன்று பட்டு
இன்று கொண்டாடுகிறோம்-நம்
சுதந்திரப் பொன் நாள்;
இதை பெற்று தந்தவர்களின்
இனிய நினைவோடு...

15-8-2011

இதை செய்யாதே,
அதை செய்யாதே,
அங்கு போகாதே,
அளவோடு பழகு,
உரக்க பேசாதே
போன்ற கட்டுபாடுகள்
இன்றும் இருக்கின்றன;
ஆண் பிள்ளை என்றும்
பெண் பிள்ளை என்றும்
வேற்றுமைகள் இன்றும்
மறையாமல் இருக்கின்றன...
நாடு முன்னேற்ற பாதையில்
நகரும் போதும்
வறுமையும், கொள்ளைகளும்,
பாதுகாப்பின்மையும்,சில கட்டுப்பாடுகளும்
இன்னும் இருக்கின்றன
நம் மண்ணில்...
ஆனாலும் கொண்டாடுகிறோம்
நம் நாடு "சுதந்திர நாடு" என்று...
பெற்றவைகள் சில,  ஆனாலும் 
இழந்தவைகள்  இன்னும்
பெற  முடியாதவைகளாகவே
இன்றும் இருக்கின்றன...

Thursday, August 04, 2011

3-5-2011

மழையின் சப்தம்
இனிய தாலாட்டாக
ஒலிக்கிறது...
அன்னையின் ஞாபகத்துடன்
உறங்கிபோகிறேன் மெதுவாக...

4-08-2011


என் பயணங்களில்
தொடரும் என் தனிமையை தவிர
அனைத்தும் சுகம் தான்;
புது சூழல், சில மனிதர்கள்,
நிறைய இயற்க்கை...


4-8-2011



என்னுள் ஏன் இந்த மாற்றம்?

எப்படி, எப்போது நிகழ்ந்தது?

என்ற கேள்விக்கு இன்றுவரை

விடை கிடைக்கவில்லை...

4-8-2011



உன்னை நினைத்து
உருகிக்கொண்டிருக்கும்  போதே
உன்னை நினைக்க கூடாத
காரணங்களும் உடனே
மனதில் வந்து நிற்கிறது!!

22-06-2011


இதழ்களில் என்றும் இருக்கும்
உடனடி புன்னகையில்
எப்போதும் மறைக்கிறேன்
என் உள்ளத்தின் வலியை...

Friday, July 01, 2011

01-07-2011



உன் நினைவுகளோடு
காதல் செய்துகொண்டிருக்கிறேன் நான்-
உன்மேல் கொண்ட
என் காதலை தெரிவிக்க
சந்தர்ப்பம் வரும் முன்னே
உன்னை பிரிந்து வந்துவிட்டேன்...
ஆனாலும் ஒரு சிறு நம்பிக்கை-
நீ எனக்கானவள் என்று...


01-07-2011


நகரும் நாட்களின் இடையே
உன் நினைவுதானடி
என் சகியே!
எங்கும் உன் முகம்
போன்ற மாயை;
உன் சிரிப்பின் ஒலி-
ஒவ்வொரு மழை துளியிலும்;
உன் வெட்கத்தின் சாயல்-
ஒவ்வொரு பூக்களிலும்;
ஆனாலும் உன்னால் மட்டுமே
எனக்கு தெரிகிறது
உன் காதல்!

01-07-2011

பரபரப்புடன் நகரும்
என் நாட்களின் நடுவே
வந்து போகிறது
உன் நினைவு-ஆனாலும்
வருந்தவில்லை மனது;
ஏனெனில் நீ 
என் மனதோடு 
புதைந்த ரகசிய வலி; 
மருந்தாக என்னிடம் இருப்பது
பாசம் என்ற வேலி...

05-07-2010


உன் மீதும் தவறில்லை,
இயற்கையின் மீதும் தவறில்லை,
என் மீது மட்டுமே
நிற்கிறது பிழை...

01-07-2011

நம்பிக்கை என்னும் விதை
நல்லதுதான்;
அது நிலத்தின்
தரத்தை பொருத்தது...
அதுபோல் மனிதனின்
தரம் பார்த்து
நம்பிக்கை வைப்பது
இன்னும் நல்லதுதான்!!!!

Thursday, June 23, 2011

23-06-2011

அந்த ஒருத்திக்காக காத்திருக்கிறேன்
இன்றுவரை...
என் வருடத்தின்  
நாட்களையும், நொடிகளையும் 
திருடிக்கொண்டு சென்ற ஒருத்தியை
தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றுவரை;
பார்த்தால் தண்டிப்பேன்-என் 
இதயத்தை என்னிடமே 
விட்டு சென்றதற்காக மட்டுமல்ல,
என் மகிழ்ச்சியை
என்னிடமிருந்து  பறித்து சென்றதற்காகவும்...

23-06-2011



என் வாழ்க்கையின்
படிக்கப்படாத பக்கங்களாக
என் தனிமையும்,
என் கனவுகளும்...
இதுவரை யாருக்கும்  புரியாத
என் மௌன மொழியை
புரிந்துகொள்ளும்
ஒரு ஜீவனுக்காக
காத்திருந்தேன்- அது 
நான் மட்டுமே என்று அறியாமல்;
தேடல்கள் முடியவில்லை இன்னும்...

28-03-2011


உன் முகம் பார்த்து
உன் எதிரே நின்று
என் மன்னிப்பை
கேட்கும் துணிவு
இன்று வரை இல்லை
என்னிடம்...

28-03-2011


இப்போதும் உன் பேச்சு
மிக சாதாரணமாகவே
இருக்கிறது என்னிடம்;
உன் கண்களில் தெரியும்
சிறு வருத்தம் மட்டும்
எவருக்கும் தெரியாமல்
என்னை தண்டிக்கிறதோ?????

29-07-2009

உனக்காக பேச ஆசைதான்-
சந்தர்ப்பம்தான்
அமைவதே இல்லை எனக்கு...

03-08-2009

உன்னை பிறர் ரசிக்கும்போதும்
கோபமே வருவதில்லை எனக்கு;
ஆனால் உன்னை பிறர்
உரிமை கொண்டாடும்போது
கோபமே வருகிறது எனக்கு...

02-07-2009


நீ, நான்
என்ற வார்த்தைகள்
நாம் என்று
உருமாற மறுக்கின்றன-ஏனெனில்
உனக்கும் எனக்குமான
இடைவெளி வெகுநீளம்... 

02-07-2009

நீ வரும் வாசலையே
பார்த்து பார்த்து
தவிக்கிறது மனது;
சீக்கிரம் வரக்கூடாதா என்ன??
என் தவிப்பு புரிந்துதான்
தாமதமாக வந்து
என் கண்களின் தவிப்பை
நோட்டமிடுகிறாயோ...??!!!!!

02-07-2009

உன்னுடன் தனியாக
பேசும் சிறு நிமிடங்களுக்காக
காரணம் தேடி
அலைகிறது மனது-உன்
உதாசீனம் தெரியாமல்...

01-07-2009

ஒரு சில நொடிகளில்
ஒரு யுக வாழ்க்கையை
நிர்ணயித்துவிடுகிறது மனது...

22-06-2011

இதழ்களில் என்றும்
இருக்கும் உடனடி
புன்னகையில் எப்போதும்
மறைக்கிறேன்-என்
உள்ளத்தின் வலியை...:-)

22-06-2011

உறவுகளிடையே அரிதாக பதியும்
என் புகைப்படம் போன்றே,
அரிதாக அவர்களுக்கு
அரும்பும் என் ஞாபகத்தில்
என்றும் எனக்கு கிடைக்கும்-
சிறு புன்னகையும்,
சின்ன சோகமும்...

22-06-2011

வேண்டாம் என்ற
ஒற்றை வார்த்தையில்
எப்போதும் அடக்குகிறேன்-
என் மனதின் ஆசையையும்,
கேட்டாலும் கிடைக்காது
என்ற நிராசையையும்.

23-06-2011

முதல் துளி
தரும் பரவசமும்,
அனுபவிக்க துடிக்கும் ஆசையும்
அடக்கப்படுகின்றன-இருக்கும்
சூழ்நிலையாலும்,மற்றவர் கேலியாலும்...
ஆனாலும் மனதில்
மகிழ்ச்சியோடு நனைகிறேன்-
குடை மறந்த நாட்களிலும்,
குடையை மறைத்த நாட்களிலும்...:-)

23-06-2011

இன்றைய பாடங்களாய்
கண்டறியப்படுகின்றன
நேற்றைய பிழைகள்.

Wednesday, June 22, 2011

01-06-2011

உன்னை விட்டு
பிரிந்த பிறகும்
என் மனதின்
மகிழ்ச்சியையும், அதிர்வுகளையும்,
சோகங்களையும், பயத்தையும்
உன்னிடமே முதலில்
பகிர்ந்துகொள்ள
ஆசைப்படுகிறது மனது...

01-06-2011

என்மேல் மோதும் காற்றில்
உன் ஞாபகம்,
மழையில்
நடக்கும் சாலையில்
உன் ஞாபகம்,
மஞ்சள் பூக்களிலும்,
வானத்து நிலவிலும்,
சில பாடல்களிலும்,
என் அலைபேசியிலும்,
எங்கும் உன் ஞாபகம்-
என் நெஞ்சோடு
புதைந்த ரகசியமாய்...

01-06-2011

உனக்கும் எனக்குமான
சில பிரத்யேக நிமிடங்களில்-
சில வருத்தங்கள்,
சில மகிழ்ச்சிகள்,
சில அழுகைகள், 
சில பார்வை பரிமாற்றங்கள்,
சில பயணங்கள்...
இவை என்றும் நம் 
இருவர் மனதின் 
அடியாழத்தில் மட்டும். 

18-06-2011

இப்பொழுதெல்லாம்
உன் நாட்களின் நடுவே
என் ஞாபகங்கள் வர
வாய்ப்பில்லை தான்;
ஆனாலும் என் ஞாபகம்
வந்துவிட கூடாது என்றுதான்
வேண்டுகிறேன்...

28-03-2011


தவறு சிறியது என்று
எப்போதும் சொல்லமாட்டேன்,
பெரிய பிழைதான்;
ஆனால் மிக சாதாரணமாகவே
உன்னிடம் அறிவித்துவிட்டேனோ????

my 1st post


என் தேடல்கள் யாவிலும்
பதில்கள் நீயாக;
முடிவு தெரியாமல்
தவிக்கும் கேள்வியாக
நான்!